Picture
இலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் கரையோரப் பிரதேசங்களில் ஆறில் இன்று இரவு கிறிஸ் மனிதர்கள் ஊடுருவி இருக்கின்றார்கள். காரைதீவு, சம்மாந்துறை, மருதமுனை, கல்முனை, பெரியநீலாவணை, பொத்துவில் ஆகிய பிரதேசங்களிலேயே கிறிஸ் மனிதர்கள் நடமாடி உள்ளார்கள். ஆயினும் இவர்களின் உடலில் கிறிஸ் பூசப்பட்டு இருந்தமையை மக்கள் கண்டு இருக்கவில்லை. 

காரைதீவில் விசேட அதிரடிப் படை முகாம் இருந்த வளவுக்கு பின்னால் இருக்கின்ற வயலுக்குள் கிறிஸ் மனிதர் ஒருவர் பதுங்கி இருந்துள்ளார். பொதுமக்கள் இவரைப் பார்த்ததை அவதானித்ததும் அந்த மர்ம மனிதர் ஒளிந்து கொண்டார்.

உடனடியாக இத்தகவல் ஊர் முழுவதும் பரவவே பொல்லுகள், கோடாரிகள், கத்திகள் போன்ற ஆயுதங்கள் சகிதம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஊரே திரண்டு வயலைச் சுற்றி வளைத்து முற்றுகை இட்டு உள்ளது. தமிழர்கள், முஸ்லிம்கள் அடங்கலாக 400 பேர் வரை இம்முற்றுகையில் பங்கேற்று உள்ளனர். 

இதே நேரம் சம்மாந்துறையில் கோரக்கோயில் என்கிற இடத்துக்கு அருகில் கிறிஸ் மனிதர் ஒருவர் பெண் ஒருவர் மீது பாய்ந்து இருக்கின்றார். 

அந்த கிறிஸ் மனிதரைப் குறித்த பெண்ணின் கணவர் விரட்டிச் சென்று இருக்கின்றார். கிறிஸ் மனிதர் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து விட்டார். உடனடியாக பொலிஸ் நிலையத்தின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. 

இந்நிலையில் ஊரே திரண்டு ஆயுதங்கள் சகிதம் பொலிஸ் நிலையத்தை முற்றுகை இட்டு உள்ளது. பொதுமக்களின் ஆக்கிரோஷத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியாமல் பொலிஸார் திணறுகின்றனர். கண்ணீர்ப் புகைப் பிரயோகம், துப்பாக்கிப் பிரயோகம் ஆகியவற்றில் ஈடுபட்டும் உள்ளார்கள். 

இதேபோல் கறுப்பு சேர்ட் அணிந்த இருவர் மோட்டார் சைக்கிள் ஒன்றில் மருதமுனையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னால் உலாவி இருக்கின்றனர். 

நதியான் குளத்துக்கு அருகில் உள்ள பள்ளிவாசல் சுவரில் மறைந்து நின்று இருக்கின்றார்கள். அவர்களின் நடமாட்டத்தில் சந்தேகமுற்ற ஊர் மக்கள் இவர்களை விரட்டினர். 

இருவரும் பெரிய நீலாவணை நோக்கி சென்று இருக்கின்றார். மருதமுனையில் தொடர்ந்தும் பதற்றம் நிலவுகின்றது. ஊரவர்கள் ஆயுதங்கள் சகிதம் வீதிகளில் திரண்டு நிற்கின்றார்கள். அதேவேளை, பெரிய நீலாவணையில் கிறிஸ் மனிதர்கள் இருவரை மக்கள் அடையாளம் கண்டு விரட்டி உள்ளனர். 

கல்முனையில் அல் வஹிரா பாடசாலைச் சுற்றாடலில் கிறிஸ் மனிதர்கள் இருவர் நடமாடி உள்ளார்கள். பொதுமக்கள் இவர்களை சுற்றி வளைத்தனர். இருவரும் பாடசாலைக்குள் புகுந்து ஒளிந்து இருக்கின்றார்கள். 

இதேவேளை, பொத்துவிலில் கிறிஸ் மனிதர்கள் இருவர் பெண் ஒருவரை காயப்படுத்தி இருக்கின்றார்கள். வைத்தியசாலையில் பெண் சேர்க்கப்பட்டு உள்ளார். 

தமிழ் முஸ்லிம் சமூகங்கள் கலந்து வாழ்கின்ற இடங்களிலேயே கிறிஸ் மனிதர்களின் ஊடுருவல்கள் இடம்பெற்று உள்ளன. கடந்த நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இறக்காமம், வரிப்பத்தாஞ்சேனை போன்ற இடங்களில் கிறிஸ் மனிதர்கள் நடமாடி இருக்கின்றார்கள். 

சன நடமாட்டம் குறைந்த, வெளிச்சம் குறைந்த தெருக்களிலேயே கிறிஸ் மனிதர்களை காண முடிந்து உள்ளது. 

தற்போது முஸ்லிம்களுக்கு நோன்புப் பெருநாள். இரவில் பெண்கள் விசேட தொழுகைக்காக தினமும் பள்ளிவாசல் செல்ல வேண்டும். ஆனால் கிறிஸ் மனிதர்களின் அட்டகாசம், அச்சுறுத்தல் ஆகியவற்றால் தொழுகைக்கு செல்கின்ற பெண்களின் எண்ணிக்கை பெரிதும் குறைந்து உள்ளது. இது முஸ்லிம்களை மன மற்றும் மத ரீதியாக பெரிதும் பாதித்து உள்ளது.

இதே நேரம் அவசர கால சட்டத்தை நீடிப்பதற்காக பதற்றச் சூழலை உருவாக்குகின்ற நோக்கில் மஹிந்த அரசுதான் பொலிஸ், இராணுவம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களை கிறிஸ் மனிதர்கள் ஆக்கி உள்ளது என மக்கள் ஐயுறவு கொண்டு உள்ளார்கள்.




Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    August 2011

    Categories

    All