Picture
இலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் கரையோரப் பிரதேசங்களில் ஆறில் இன்று இரவு கிறிஸ் மனிதர்கள் ஊடுருவி இருக்கின்றார்கள். காரைதீவு, சம்மாந்துறை, மருதமுனை, கல்முனை, பெரியநீலாவணை, பொத்துவில் ஆகிய பிரதேசங்களிலேயே கிறிஸ் மனிதர்கள் நடமாடி உள்ளார்கள். ஆயினும் இவர்களின் உடலில் கிறிஸ் பூசப்பட்டு இருந்தமையை மக்கள் கண்டு இருக்கவில்லை. 

காரைதீவில் விசேட அதிரடிப் படை முகாம் இருந்த வளவுக்கு பின்னால் இருக்கின்ற வயலுக்குள் கிறிஸ் மனிதர் ஒருவர் பதுங்கி இருந்துள்ளார். பொதுமக்கள் இவரைப் பார்த்ததை அவதானித்ததும் அந்த மர்ம மனிதர் ஒளிந்து கொண்டார்.

உடனடியாக இத்தகவல் ஊர் முழுவதும் பரவவே பொல்லுகள், கோடாரிகள், கத்திகள் போன்ற ஆயுதங்கள் சகிதம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஊரே திரண்டு வயலைச் சுற்றி வளைத்து முற்றுகை இட்டு உள்ளது. தமிழர்கள், முஸ்லிம்கள் அடங்கலாக 400 பேர் வரை இம்முற்றுகையில் பங்கேற்று உள்ளனர். 

இதே நேரம் சம்மாந்துறையில் கோரக்கோயில் என்கிற இடத்துக்கு அருகில் கிறிஸ் மனிதர் ஒருவர் பெண் ஒருவர் மீது பாய்ந்து இருக்கின்றார். 

அந்த கிறிஸ் மனிதரைப் குறித்த பெண்ணின் கணவர் விரட்டிச் சென்று இருக்கின்றார். கிறிஸ் மனிதர் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து விட்டார். உடனடியாக பொலிஸ் நிலையத்தின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. 

இந்நிலையில் ஊரே திரண்டு ஆயுதங்கள் சகிதம் பொலிஸ் நிலையத்தை முற்றுகை இட்டு உள்ளது. பொதுமக்களின் ஆக்கிரோஷத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியாமல் பொலிஸார் திணறுகின்றனர். கண்ணீர்ப் புகைப் பிரயோகம், துப்பாக்கிப் பிரயோகம் ஆகியவற்றில் ஈடுபட்டும் உள்ளார்கள். 

இதேபோல் கறுப்பு சேர்ட் அணிந்த இருவர் மோட்டார் சைக்கிள் ஒன்றில் மருதமுனையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னால் உலாவி இருக்கின்றனர். 

நதியான் குளத்துக்கு அருகில் உள்ள பள்ளிவாசல் சுவரில் மறைந்து நின்று இருக்கின்றார்கள். அவர்களின் நடமாட்டத்தில் சந்தேகமுற்ற ஊர் மக்கள் இவர்களை விரட்டினர். 

இருவரும் பெரிய நீலாவணை நோக்கி சென்று இருக்கின்றார். மருதமுனையில் தொடர்ந்தும் பதற்றம் நிலவுகின்றது. ஊரவர்கள் ஆயுதங்கள் சகிதம் வீதிகளில் திரண்டு நிற்கின்றார்கள். அதேவேளை, பெரிய நீலாவணையில் கிறிஸ் மனிதர்கள் இருவரை மக்கள் அடையாளம் கண்டு விரட்டி உள்ளனர். 

கல்முனையில் அல் வஹிரா பாடசாலைச் சுற்றாடலில் கிறிஸ் மனிதர்கள் இருவர் நடமாடி உள்ளார்கள். பொதுமக்கள் இவர்களை சுற்றி வளைத்தனர். இருவரும் பாடசாலைக்குள் புகுந்து ஒளிந்து இருக்கின்றார்கள். 

இதேவேளை, பொத்துவிலில் கிறிஸ் மனிதர்கள் இருவர் பெண் ஒருவரை காயப்படுத்தி இருக்கின்றார்கள். வைத்தியசாலையில் பெண் சேர்க்கப்பட்டு உள்ளார். 

தமிழ் முஸ்லிம் சமூகங்கள் கலந்து வாழ்கின்ற இடங்களிலேயே கிறிஸ் மனிதர்களின் ஊடுருவல்கள் இடம்பெற்று உள்ளன. கடந்த நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இறக்காமம், வரிப்பத்தாஞ்சேனை போன்ற இடங்களில் கிறிஸ் மனிதர்கள் நடமாடி இருக்கின்றார்கள். 

சன நடமாட்டம் குறைந்த, வெளிச்சம் குறைந்த தெருக்களிலேயே கிறிஸ் மனிதர்களை காண முடிந்து உள்ளது. 

தற்போது முஸ்லிம்களுக்கு நோன்புப் பெருநாள். இரவில் பெண்கள் விசேட தொழுகைக்காக தினமும் பள்ளிவாசல் செல்ல வேண்டும். ஆனால் கிறிஸ் மனிதர்களின் அட்டகாசம், அச்சுறுத்தல் ஆகியவற்றால் தொழுகைக்கு செல்கின்ற பெண்களின் எண்ணிக்கை பெரிதும் குறைந்து உள்ளது. இது முஸ்லிம்களை மன மற்றும் மத ரீதியாக பெரிதும் பாதித்து உள்ளது.

இதே நேரம் அவசர கால சட்டத்தை நீடிப்பதற்காக பதற்றச் சூழலை உருவாக்குகின்ற நோக்கில் மஹிந்த அரசுதான் பொலிஸ், இராணுவம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களை கிறிஸ் மனிதர்கள் ஆக்கி உள்ளது என மக்கள் ஐயுறவு கொண்டு உள்ளார்கள்.

 
Picture
லண்டன் கலவரம் மேலும் 3 நகரங்களுக்கு பரவியது
லண்டனில் கலவரம் நேற்று மேலும் 3 நகரங்களுக்கும் பரவியது.

லண்டனில் டட்டன்ஹாம் பகுதியில் வசிக்கும் கறுப்பர் இன இளைஞர் போலீஸ் நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட கறுப்பர்கள் போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கலவரமாக மாறியது. கடைகள் சூறையாடப்பட்டன. கட்டிடங்கள், பஸ்கள், போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த கலவரம் தொடர்ந்து நடந்து வருகிறது. தெற்கு லண்டனில் உள்ள குரோய்டான் என்ற இடத்தில் பல கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டன. 100ஆண்டு பழமையான ரீவ்ஸ் பர்னிச்சர் கடையும் தீக்கிரையானது.

இந்த கலவரம் நேற்று மேலும் 3 நகரங்களுக்கும் பரவியது. பர்மிங்ஹாம், பிரிஸ்டால், லிவர்பூல் ஆகிய நகரங்களுக்கும் இந்த கலவரம் பரவியது. இன்று (புதன்கிழமை) முதல் பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் என்ற பகுதியில் இந்தியா இங்கிலாந்து இடையே 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடக்கிறது. அங்கு கலவரம் ஏற்பட்டு உள்ளது. இந்த கலவரம் தொடர்பாக கடந்த 3 நாட்களில் 400 பேர் கைது செய்யப்பட்டனர்.

இங்கிலாந்து பிரதமர் கேமரூன் விடுமுறையில் இத்தாலி சென்று இருந்தார். கலவரம் பரவி வருவதைத் தொடர்ந்து அவர் விடுமுறையை ரத்து செய்து விட்டு நேற்று அவசரமாக நாடு திரும்பினார். லண்டன் வந்து சேர்ந்ததும் அவர் கலவரத்தை அடக்குவதற்கான வழிவகைகளை காண்பதற்காக ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். பிரதமர் பாராளுமன்றத்தையும் கூட்டி இருக்கிறார். பாராளுமன்றத்தில் கலவரம் தொடர்பாக விவாதிக்கப்பட இருக்கிறது.

லண்டனில் ஏற்பட்ட வன்முறை இப்போது 4-வது நாளாக புதிய நகரங்களுக்கும் பரவியுள்ளது. வன்முறைச் சம்பவங்களையடுத்து லண்டனில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். பிரிட்டனின் 3-வது பெரிய நகரமான மான்செஸ்டரில் கடைகளின் மீது இளைஞர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். சில கடைகளில் கொள்ளையடிக்கப்பட்டது. அதை புகைப்படம் எடுத்தவர்களை அவர்கள் விரட்டியடித்தனர். 30 ஆண்டுகளில் மிகவும் மோசமான வன்முறைச் சம்பவம் இது என போலீசார் தெரிவிக்கின்றனர்.

 
Picture
சிறுவன் தலையில் இருந்த பனிக் கரடியின் பல் அகற்றப்பட்டது.

நார்வேயில் சுற்றுலா சென்ற மாணவனை பனிக்கரடி தாக்கியதில் சிறுவன் உயிரிழந்தான்.

கல்விச் சுற்றுலாவுக்காக, நார்வேயின் வடக்கில் உள்ள ஸ்பிட்ஸ்பெர்கன் சென்ற பள்ளி மாணவர்களை பனிக்கரடி தாக்கியது. இதில், ஒரு மாணவன் உயிரிழந்தான். முகம் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட மற்றொரு மாணவனுக்கு, அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள், அவனது தலையில் பதிந்திருந்த கரடியின் பல்லை வெளியே எடுத்தனர். மாணவர்களை தாக்கிய கரடியை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

 
Picture
சீனாவின் விமானம் தாங்கி கப்பல் வெள்ளோட்டம்


சீனா தன் முதல் விமானந்தாங்கிக் கப்பலை நேற்று வெள்ளோட்டம் விட்டது. இதனால், சீன ராணுவத்தின் அதிவேக நவீனமயம் குறித்த கவலை, உலக நாடுகளிடையே அதிகரித்துள்ளது.

உக்ரைன் நாட்டின் விமானந்தாங்கிக் கப்பலை வாங்கி மறுசீரமைப்பு செய்த சீனா, லியாஓனிங் மாகாணத்தின் டலியன் துறைமுகத்தில் இருந்து, நேற்று அக்கப்பலை வெள்ளோட்டம் விட்டது. 'வர்யாக்' என்ற அக்கப்பல், முன்னாள் சோவியத் யூனியன் அரசால் வடிவமைக்கப்பட்டது. 1991ல் சோவியத் யூனியன் குலைந்த போது, அக்கப்பல் கட்டுமானம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து அக்கப்பலை, உக்ரைன் அரசு வாங்கியது. இதையடுத்து, சீனா அக்கப்பலை வாங்கி, கடந்த 10 ஆண்டுகளாக மறுசீரமைப்பு செய்து வந்தது. 14ம் தேதி வரை நடக்கும் வெள்ளோட்டம் முடிந்து, துறைமுகத்திற்குத் திரும்பிய பின்னும் மறுசீரமைப்பு தொடரும்.

விமானந்தாங்கிக் கப்பல் வெள்ளோட்டத்தால், சீன ராணுவத்தின் அதி நவீனமயம் மற்றும் தென் சீனக் கடலில் அந்நாட்டின் ஆதிக்கம் அதிகரிப்பது ஆகியவை குறித்து, தென்கிழக்காசிய நாடுகள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.

 
Picture
அமெரிக்காவின் பழமையான சுதந்திர தேவி சிலை மூடப்படுகிறது.


அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சுதந்திர தேவி சிலை புதுப்பிப்பு பணிக்காக ஒரு ஆண்டு மூடப்படுகிறது.அமெரிக்காவின் அடையாளமாக உள்ள சுதந்திர தேவி சிலை 305 அடி உயரத்துடன்(93 மீட்டர்) கம்பீரமாக வானை நோக்கி உயர்ந்து நிற்கிறது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க சிலையை புதுப்பிக்க 2 கோடியே 75 லட்சம் டாலர் செலவு ஆகும் என அமெரிக்க உள்துறை அமைச்சர் கென் சலாசர் தெரிவித்தார்.

சுதந்திர தேவி சிலை 125 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த சிலையை புதுப்பிக்க மிகப்பெரும் ஏணிகள் மற்றும் எலிவெட்டர்கள் நிறுவப்படுகின்றன. சிலை மூடப்பட்டிருந்தாலும் சுதந்திர தீவு பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டு இருக்கும்.

கடந்த 1886ஆம் ஆண்டு சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பிரான்ஸ் அர்ப்பணித்தது. இந்த புகழ்மிக்க சிலையை ஆண்டு தோறும் 35 லட்சம் மக்கள் பார்த்து செல்கின்றனர். கடந்த 2001ஆம் ஆண்டு அல்கொய்தா தாக்குதலுக்கு பின்னர் இந்த சிலையின் உள் பகுதியில் ஏற பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

 
Picture
கிறீஸ் மர்ம மனிதர்கள்
நாட்டின் பல பிரதேசங்களில் தற்போது பொதுமக்களை அச்சுறுத்திவரும் கிறீஸ் மர்ம மனிதர்களின் நடவடிக்கைகள் ராஜபக்ஷர்களின் திட்டத்திற்கமைய முன்னெடுக்கப்டுவதாக ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். 

பொதுமக்களை அச்சுறுத்திவரும் இந்த மர்ம மனிதர்கள் ராஜபக்ஷவின் சகாக்கள் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

கிறீஸ் மர்ம மனிதர்களின் மூலம் மக்களை அச்சுறுத்தி துட்டகைமுனுவின் வாள் தேடப்படுவதாகவும் விஜித்த ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

துட்டகைமுனுவின் வாள் கிடைத்தால், அது நீண்டகாலம் அதிகாரத்தில் இருப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் இதனால் அந்த வாளை தேடுவதற்காக ஜனாதிபதி ராஜபக்ஷவின் சகாக்களின் குழுவொன்று கிறீஸ் மர்ம மனிதர்களாக மக்களை பயமுறுத்துகின்றனர் எனவும் விஜித்த ஹேரத் குற்றஞ்சுமத்தினார்.

இதனிடையே மஹியங்கனை பிரதேசத்திற்கு அண்மித்த நாகதீப வாவியில் துட்டகைமுனுவின் வாளைத் தேடும் பாரிய தேடுதல் பணியொன்று தற்போது முன்னெடுக்கப்படுவதாகவும் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.


 
Picture
ரஷ்யாவில் விமான விபத்தில் 15 பேர் காயம்

ரஷ்யாவில் விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் 15 பேர் காயமடைந்தனர்.

ரஷ்யாவில் பயணிகள் விமானம் ஒன்று பிலாகோ வெவ் சென்ஸ்க் விமான நிலையத்தில் நேற்று காலை தரை இறங்கியது. அப்போது காற்றுடன் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் ஓடுதளத்தில் இறங்கிய விமானம் தாறு மாறாக சறுக்கி 200 மீட்டர் தூரம் ஓடி விபத்துக்குள்ளாது. அதில் விமானத்தின் இறக்கைகள் உடைந்தன. அந்த விமானத்தில் 36 பயணிகள் இருந்தனர். அவர்களில் 15 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 7 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    August 2011

    Categories

    All