Picture
அம்பாறையில் வாக்கு மோசடிகளைத் தடுக்க எதிரணி கூட்டமைப்பு விசேட ஏற்பாடு


வீரகேசரி இணையம் 1/25/2010 1:58:41 PM - இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களாகிய, நாவிதன்வெளி, கல்முனை, காரைதீவு, ஆலையடிவேம்பு, கோமாரி, திருக்கோவில், வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்கு மோசடிகள் நடப்பதை முன்கூட்டியே தடுப்பதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியன சேர்ந்து சில விசேட ஏற்பாடுகளைக் கூட்டாக எடுத்துள்ளன.

இது சம்பந்தமாக எடுக்கப்பட்டுள்ள முடிவுகளின் விபரங்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவிக்கையில்,

"கடந்த வெள்ளிக்கிழமை 22 ஆம் திகதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் றவூப் ஹக்கீம் தலைமையில் அவரது சம்மாந்துறை அலுவலகத்தில் கூடி ஆராயப்பட்டது. அதன் அடிப்படையில் வாக்கு மோசடிகள் நடக்கக்கூடிய அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டன.

அப்பகுதிகளில் எதிர்க்கட்சிப் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,ஐக்கிய தேசியகட்சி,மக்கள் விடுதலை முன்னணி ஆகிய நான்கு கட்சிகளும் ஒன்றிணைந்து மூவினத்தையும் சேர்ந்த வாக்கெடுப்பு முகவர்களைத் தமிழ்ப் பிரதேச வாக்கெடுப்பு நிலையங்களுக்கு நியமிக்க முடிவெடுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் இந்த நான்கு கட்சிகளும் கடந்த இரண்டு தினங்களாக கலந்தாலோசித்து அம்பாறை மாவட்ட தமிழ்ப் பிரதேசங்களில் எந்தவொரு வாக்கு மோசடிகளையும் தவிர்ப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹசன் அலி, நௌஷாத் ஜோசப் தங்கத்துரை,வசந்த (மக்களவிடுதலை முன்னணி) கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், தயாகமகே, மஜீட் மற்றும் கல்முனை மாநகர சபை எதிர்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன் ஆகியோரை உள்ளடக்கிய குழு ஒருங்கிணைக்கும் பணியை முன்னெடுக்கவுள்ளது.

நியமிக்கப்படும் வாக்கெடுப்பு முகவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்கெடுப்பு நிலையங்களில் பணிபுரியும் போது, ஏதாவது வாக்கு மோசடி நடந்தால், கையடக்கத் தொலைபேசி மூலமாக உடனடியாக அம்பாறை மாவட்ட தமிழ்ப் பிரதேசங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும் பொதுக்கூட்டணியின் பிரதேச செயலகங்களுக்கு அறிவிப்பதற்கும் அதை உரிய இடத்திற்கு அறிவித்து மோசடிகளைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடந்த கிழக்கு மாகாணசபை தேர்தலில் பாரிய அளவில் வாக்கு மோசடிகள் நடந்த வாக்கெடுப்பு நிலையங்கள் பற்றிய தகவல்கள் ஏற்கனவே தேர்தல் ஆணையாளரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் தேர்தல் ஆணையாளர் ஏற்கனவே வாக்கு மோசடிகளைத் தடுப்பதற்கான, விசேட ஏற்பாடுகளைச் செய்துள்ளார். இதற்கமைய இவ்வாக்கெடுப்பு நிலையங்களில் ஏதாவது வாக்கு மோசடி நடந்தால் அதனைத் தடுப்பதற்கு விசேட ஏற்பாடுகள் எடுக்க முடியாது போகும். இத்தகைய சந்தர்ப்பத்தில் அது தொடர்பாக தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்து அந்த வாக்கெடுப்பை ரத்துசெய்து, மீண்டும் தேர்தல் நடத்துவதற்கும் முடிவு எடுத்துள்ளனர்.

ஆகவே இந்த சூழ்நிலையில் தமிழ் மக்கள் எந்த அச்சமும் பீதியுமின்றி வாக்கெடுப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்குமாறு வேண்டப்படுகின்றார்கள்" எனத் தெரிவித்தார்.




Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    January 2010

    Categories

    All