பறக்கும் கப்பல்

விந்தை மனிதன், விந்தை உலகம். ஏதாவது புதினம் செய்து கொண்டிருக்க வேண்டும் என்று தினமும் போராடும் மனிதன். மனிதனின் விடாமுயற்சி எதையும் விட்டுவைப்பதில்லை. கண்டுபிடிப்புகளும் ஆராய்ச்சிகளும் ஒன்று முடிந்தால் மற்றொன்று ஆரம்பமாகிறது.

இப்படித்தான் பறக்கும் இரயில், மிதக்கும் உலகம், மிதக்கும் விமான நிலையம் என ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கிறது.

புதிய கண்டுபிடிப்புகளில் சமீபத்தியது ராட்சத விமானம். அதற்கு அடுத்தபடியாக இப்போது பறக்கும் கப்பல் அல்லது பறக்கும் நகரமே வந்துவிட்டது.

கவிஞர்கள் தங்கள் கவிதைகளில் கற்பனையாக வடித்தது எல்லாம் நிஜமாகிக் கொண்டிருக்கிறது. 'ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா' என்ற திரைப்பட பாடலின் கற்பனை எண்ணங்களை நிஜமாக்கியிருக்கின்றது இன்றைய விஞ்ஞானம்.

ஆகாயத்திலேயே பறக்கின்றோம் என்ற உணர்வே இல்லாதவாறு சொகுசை அனுபவித்த படி பயணம் செய்ய இன்றைய அறிவியல் தொழில் நுட்பங்கள் நமக்கு உதவுகின்றன.

இனி விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றங்கள், பாட்டுக் கச்சேரிகள், அரசியல் பொதுக் கூட்டங்கள் இவையெல்லாம் விமானத்திலேயே நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. விமானம் கண்டுபிடித்த காலத்தில் ஆகாயத்தில் பறக்க முடியுமா? என்று கேள்வி கேட்ட மனிதனுக்கு மிதக்கவே முடியும் என்று விடை கிடைத்துக் கொண்டிருக்கிறது இப்பொழுது. அது நிரூபிக்கப்பட்டும் வருகிறது.

'சீட் பெல்ட்' போட்டு இருக்கையில் அமர்ந்து விமானத்தில் பறந்த காலம் போய் விமானத்தின் உள்ளேயே நாம் ஆடிப்பாடி மகிழ்ச்சியில் திளைத்தபடி உல்லாசமாக பறக்கலாம். உள்ளேயே உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள், விளையாட்டு அறைகள்... எல்லாம் பறந்து கொண்டே.இவையெல்லாம் எங்கு என்று கேட்கின்றீர்களா? உருவாகிக் கொண்டிருக்கும் பறக்கும் சொகுசுக் கப்பலில் தான் இத்தனை வசதிகளும் இருக்கிறது. அது பற்றி இந்த வாரம் அறிவியல் அதிசயம் பகுதியில் காண்போம்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள வோர்ல்ட் வைட் ஏரோஸ் கார்ப்பரேசன் என்ற நிறுவனம் இந்த பறக்கும் கப்பலை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம் உலகிலேயே விமானம் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இராணுவம், தனி நபருக்கான விமானம், சொகுசு விமானம் என்று பல நவீன ரக விமானங்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது.

தற்போது தயாராகி வரும் பறக்கும் சொகுசு கப்பல் 'பறக்கும் குயின் மேரி-2' என்று வர்ணிக்கிறார்கள். அதாவது தற்பொழுது உலகிலேயே பெரிய பயணிகள் சொகுசு கப்பலாக 'குயின் மேரி-2' உள்ளது இந்த கப்பல் பறந்தால் எப்படியிருக்குமோ அது போல இந்த நவீன விமானம் இருக்கும் என்பதால் இது இவ்வாறு வர்ணிக்கப்படுகிறது.

'மோபி ஏர்' என்று பெயரிடப்பட்டுள்ள இதனுடைய அளவு என்ன தெரியுமா? சுமார் ஒரு ஏக்கர். அதாவது இரண்டு கால்பந்து மைதானத்தின் அளவிற்கு இது சமமானது.

இதனுடைய உயரம் 165 அடி. அதாவது சுமார் 8 மாடிக்கட்டிடம் உயரம் கொண்டது. அகலம் 244 அடி, நீளம் 647 அடி கொண்டது. 6ஆயிரம் மைல் தூரம் தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டது. ஒரே நேரத்தில் 250 பயணிகள் தங்கள் வீட்டில் இருப்பது போன்ற வசதிகளை அனுபவித்தபடி பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.

இக்கப்பலை வடிவமைக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் இகோர் பாஸ்டர்னாக் கூறுகையில், "பயணிகள் கப்பலை தயாரிக்கும் பல நிறுவனங்கள் இப்பெரிய விமானத்தை தயாரிக்கும் திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.


பல்லாயிரக்கணக்கான மைல்கள் செல்லும் இந்த பறக்கும் (கப்பல்) விமானம் மணிக்கு 174 மைல் வேகத்தில் செல்லக்கூடியது. 18 மணி நேரத்தில் அமெரிக்காவையே வலம் வந்துவிடும்'' என்கிறார்.

8 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் போதே பயணிகள் முக்கிய நகரங்களையும், பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களையும், புகழ்பெற்ற வானுயர்ந்த கட்டிடங்களையும் கண்டுகளிக்கலாம்.

மேலும் விமானத்தின் உள்ளேயே சொகுசு விருந்தினர்கள் அறைகள், உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் முதலியவை இருக்கும். இதில் பயணம் செய்யும் போது ஒரு உல்லாசக் கப்பலில் இருப்பது போன்ற உணர்வு தான் இருக்கும். இதனுடைய இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் இந்த மெகா விமானம் ஹெலிகாப்டர் போலவே செங்குத்தாக மேலெழும்பவும், கீழிறங்கவும் கூடியது. இது புறப்பட ஓடுதளம் தேவையில்லை.

உள்ளே இருக்கும் பயணிகளுக்கு விமானம் பறக்கும் சப்தம் கேட்காத வகையில் உந்து சக்தி இயந்திரங்கள் விமானத்தின் பின் புறத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விமானம் பறக்க ஹைட்ரஜன் எரிசக்தி பயன்படுத்தப்படுகிறது. உள்ளே பயணிகளின் நடமாட்டம் மற்றும் விமானத்தின் வெளிப்புற சீதோஷ்ணம் மற்றும் அழுத்தம் இவைகளை ஈடுகட்டும் விதமாக நவீன தொழில் நுட்பத்துடன் மிதவை முறைகள் அமைக்கப்பட்டுள்ளன.


பறக்கும்போது விமானத்தின் எடையை சமாளிக்கும் விதமாக இதனுடைய தானியங்கி முறைகள் மூலம் வெளிப்புறத்திலிருந்து காற்றை உள்வாங்கி அதற்கேற்ப சுருக்கி விமானம் முழுவதும் கொடுக்கிறது. மேலும் இந்த விமானத்தை அவசர காலத்தில் பனிக்கட்டி நிறைந்த தரையிலும், தண்ணீரிலும் தரையிறக்க முடியும்.

வருகிற 2010-ல் இத்திட்டம் நிறைவடைய இருக்கிறது. நேரம் பொன்னானது என்று சொல்வார்கள். ஆனால் நேரத்தை பொன்னை விட மேலானதாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அரிய கண்டுபிடிப்புகள், சாதனைகள், வியப்பூட்டும், பிரமிக்க வைக்கும், அதிசயக்க வைக்கும் ஆராய்ச்சிகள் என்று நாளுக்கு நாள் புதிய புதிய கண்டுபிடிப்புகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன.

இன்றைய கற்பனைக் கனவுகள் நாளை நிஜமாகி விடுகிறது. இன்றைய அதிசயங்களை நாளைய முன்னேற்றங்கள், வளர்ச்சிகள் இயல்பாக்கிவிடுகின்றன.

'கனவு காணுங்கள்' என்று நம் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் சொன்னது சாதாரண வார்த்தை அல்ல. நாளைய விஞ்ஞானிகளை உருவாக்கும் மந்திர சொல் இது என்றே சொல்லலாம். மாயாஜாலம் போன்ற கற்பனைகளை நிஜத்திற்கு கொண்டு வரும் ஒரு கருவி. நேற்று கற்பனை செய்த இந்த பறக்கும் விந்தைகளெல் லாம் இன்று அரிய சாதனை. நாளை என்னென்ன வரப் போகிறதோ? எதிர்பார்ப்போம்!

Leave a Reply.

  Author

  Write something about yourself. No need to be fancy, just an overview.

  Archives

  February 2010

  Categories

  All